search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மளிகை மார்க்கெட்டில் ஒரு கிலோ சீரகம் ரூ.600-க்கு விற்பனை
    X

    கோயம்பேடு மளிகை மார்க்கெட்டில் ஒரு கிலோ சீரகம் ரூ.600-க்கு விற்பனை

    • சீரகத்தை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்காக சென்னைக்கு வருகிறது.
    • பாசுமதி அரிசி விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    சென்னை:

    காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.

    ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாகவே தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 60 லாரிகளில் குவிந்து வரும் தக்காளியின் வரத்து திடீரென 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.130 வரையில் விற்பனை ஆகிறது.

    இதேபோல் சின்ன வெங்காயம், காய்கறி விலையும் தினமும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் விலை இன்று மேலும் அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.170 வரை விற்பனை ஆகி வருகிறது. இஞ்சி ஒரு கிலோ ரூ.280-ஆக எகிறி உள்ளது.

    காய்கறி விலையும் உச்சத்தில் இருந்து வருகிறது. இன்று பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-யை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.130 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கறி விலையும் குறையாமல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி செல்லும் காய்கறிகளை தற்போது 1/4 கிலோ அளவிற்கு மட்டுமே வாங்கி செல்லும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உஜாலா கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ.40, அவரைக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.40, பீன்ஸ்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பச்சை மிளகாய்-ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோன்று பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது கோயம்பேடு மளிகை மார்க்கெட்டின் விலையாகும். இதற்கு முன்னாள் துவரம் பருப்பின் விலை ரூ.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பூண்டின் விலையும் ரூ.40-ல் இருந்து ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.

    மளிகை பொருட்களிலேயே சீரகத்தின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. கோயம்பேடு மளிகை மார்க்கெட்டில் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சீரகம் ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்ன? என்பது பற்றி வியாபாரிகள் கூறியதாவது:-

    சீரகத்தை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்காக சென்னைக்கு வருகிறது. அங்கு தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வரத்து குறைந்து கடுமையாக விலை உயர்ந்துள்ளது.

    பாசுமதி அரிசியின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 25 கிலோ கொண்ட ஒரு பை பாசுமதி அரிசி ரூ.1800-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூ.860-ல் இருந்து ரூ.900 ஆக உயர்ந்துள்ளது

    Next Story
    ×