search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனியில் தொடர் மழை: கும்பக்கரை, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
    X

    கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தேனியில் தொடர் மழை: கும்பக்கரை, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

    • வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×