search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
    X

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து: குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
    • கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் விளைவாக பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடி உயர்ந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 94.40 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.17 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,909 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாக உள்ளது. அணைக்கு 340 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 3.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 1.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த அணை முழுகொள்ளளவான 36 அடியை எட்டி 2 வாரங்களுக்கும் மேலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படு கிறது. குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 116 அடியை எட்டியது. அந்த அணை நிரம்ப இன்னும் 16 அடி நீரே தேவைப்படுகிறது.

    கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது. ராமநதி நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 64 அடியாக உள்ளது. கருப்பாநதியில் 44.62 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது.

    குற்றாலம் அருவி பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×