search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டையில் தொடர்மழை- குண்டாறு அணை நீர்மட்டம் 35 அடியை எட்டியது
    X

    குண்டாறு அணை

    செங்கோட்டையில் தொடர்மழை- குண்டாறு அணை நீர்மட்டம் 35 அடியை எட்டியது

    • மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது குண்டாறு அணையாகும். ஒருங்கிணைந்திருந்த நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழையின்போது முதல் முதலில் நிரம்பும் அணை இந்த அணைதான்.

    மிகச்சிறிய அதாவது 36 அடி மட்டுமே கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் அப்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் பாசன பரப்பளவில் முப்போக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குண்டாறு நீர்த்தேக்கத்தை நம்பி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரினால் தஞ்சாவூர் குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்று வாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள். கடந்த ஆண்டு இந்த அணை தென்மேற்கு பருவ காலத்தில் முதல் அணையாக நிரம்பி அதன் உபரிநீர் கிட்டத்தட்ட 122 நாட்கள் வரை வழிந்தோடியது.

    இதன்முலம் 11 குளங்கள் நிறைந்ததால் கார் சாகுபடி செழிப்பாக நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு மழையின் தாக்கம் குறைந்ததால் அணையில் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குண்டாறு அணை நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் விவசாய பணிகள் தொடங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடந்து பெய்துவரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை குண்டாறு அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இன்னும் அந்த அணை முழு கொள்ளவை எட்ட 1 அடி நீரே தேவை. தொடர்ந்து அணை பகுதியில் மழை பெய்வதால் இன்று மாலைக்குள் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×