search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு- கலெக்டர் உறுதி
    X

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்

    என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு- கலெக்டர் உறுதி

    • நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர்.
    • 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புவனகிரி தாலுகா வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி மற்றும் 4 கிராமங்களின் வழியாக பரவனாறு செல்கிறது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பணிக்காக பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினரால் 6 கிராமங்களில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்.எல்.சி.யிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டேர் நிலங்களுக்கு தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்தனர். இதனால் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உரிமையாளர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டிருந்த 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.

    அதேபோல் கையகப்படுத்தப்பட்டுள்ள 83 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரும் 405 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு 2.6 லட்சம் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை நீங்கலாக, தற்போது ரூ.14 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 301 பேரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேருக்கு, ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. அதாவது மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நில உரிமையாளர்களை நேரில் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே என்.எல்.சி.யில் 800 மெகாவாட் மின்உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து, கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய கலெக்டரால் விவசாயிகளிடம் பரவனாறு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. ஏற்கனவே எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.

    நிலக்கரி எடுக்க போதிய இடமில்லாததே அதற்கு காரணம். அதனால் தான் தற்போது பரவனாறு மாற்றுப்பாதை திட்ட பணி நடக்கிறது. அந்த ஆற்றுக்கு மாற்றுப்பாதை அமைக்க 30 ஹெக்டேர் இடம் தேவைப்படுகிறது. இந்த இடத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உயரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை கையகப்படுத்துவது குறித்து கடந்த வாரமும், நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்) விவசாயிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடு போக, கருணை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 16.8.2023 முதல் 26.8.2023 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் பெற்று, கருணைத்தொகை வழங்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரவனாறு மாற்றுப்பணி அமைக்கும் பணியின் போது வேளாண்மைப் பயிர்கள் சேதமடைந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும்.

    கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டரால், நில உரிமையாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கப்படும் பகுதியில் பணி மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தும் கேளாமல், நில உரிமையாளர்கள் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதேபோன்று கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்னரும், கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்காமல் தொடர்ந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகமும் கருணை அடிப்படையில் விவசாயிகள் பயிர் செய்வதை கண்டு கொள்ளவில்லை. அப்போதே என்.எல்.சி. நிர்வாகம் பயிர் செய்ய விடாமல் தடுத்திருந்தால், தற்போது பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நில உரிமையாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பல்வேறு காலகட்டங்களிலும் தீர்த்து வைத்து, அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    Next Story
    ×