என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர், அரியலூரில் 30,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் வழங்கினார்
- அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
- பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரியலூர்:
திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருச்சி வருகை தந்தார்.
திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 13,210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பெரம்பலூர் சென்ற அவர் எறையூரில் மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழில் பூங்கா மற்றும் 243 ஏக்கரில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் வழிகாட்டு நிறுவனத்தோடு, பிரபல 10 நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ரூ.741 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள இந்த ஒப்பந்தம் மூலம் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது தொல்லியல் துறையின்கீழ் தோண்டப்பட்டு கிடைக்கப் பெற்றுள்ள அரண்மனை அடித்தட்டு பகுதிகள், சோழர்கால கட்டிடங்கள், தங்கக்காப்பு துண்டுகள், சீன நாட்டின் கண்ணாடி துண்டுகள், இரும்பால் ஆன ஆணி, பழங்கால மண் பானைகள் ஆகியவற்றை பார்த்து வியந்து அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.
இரவு அரியலூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கழமை) காலை 9.15 மணிக்கு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு சென்றார்.
அங்கு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் அரியலூரில் இருந்து காரில் திருச்சி விமான நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.






