என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
கலைமாமணி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
- 1000 கலைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழகத்தில் கலைமாமணி விருது பெற்றவர்களில் சிலர் ஏழ்மை நிலையில் உள்ளதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற 10 பேர்களுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கினார். மேலும் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இதற்கான காசோலையை 6 பேர் நேரில் வந்து பெற்றுக்கொண்டனர்.
தலா ரூ.1லட்சம் வாங்கியோர்கள் பெயர் வருமாறு:-
கே.கல்யாணசுந்தரம், ச.சமுத்திரம், என்.பார்வதி உதயம், கே.குமரவேல், பா.முத்துசந்திரன், கோ.முத்துலட்சுமி, பி.ஆர்.துரை, ரா.கல்யாணசுந்தரம், எம்.எஸ்.முகமது மஸ்தான், டி.என்.வரலட்சுமி ஆகியோருக்கு பொற்கிழித்தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் நலிந்த நிலையில் உள்ள வயோதிகக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதை வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதி உதவிக்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








