என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூரில் வருகிற 1, 2-ந் தேதிகளில் கள ஆய்வு: முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
    X

    வேலூரில் வருகிற 1, 2-ந் தேதிகளில் கள ஆய்வு: முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

    • வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
    • தேசிய, மாநில சாலை தடுப்பு சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

    வேலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்கு வருகிற 1, 2-ந்தேதிகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு 1-ந்தேதி வேலூருக்கு வருகிறார். அன்று மாலை 5 மணிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கலைஞர் பிளாக் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அங்கு வைத்து முதலமைச்சர் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் இரவு முதலமைச்சர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    தொடர்ந்து 2-ந்தேதி காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலக 5-வது மாடியில் உள்ள அரங்கில் அரசுத்துறையின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட தீர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் அவர் ஓய்வெடுக்க உள்ள சுற்றுலா மாளிகை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலா மாளிகை வளாகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்து காணப்பட்ட கட்டிடங்களை சீரமைத்து, வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று 5-வது மாடியில் உள்ள அரங்கமும் ஆய்வுக்கூட்டத்துக்காக புதுப்பொலிவுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் சாலை மார்க்கமாக பயணம் செய்வதால் வேலூர், காட்பாடி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். மேலும் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    தேசிய, மாநில சாலை தடுப்பு சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

    முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×