search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் ஆணையர் 2-வது நாளாக ஆலோசனை
    X

    தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.யுடன் தலைமை தேர்தல் ஆணையர் 2-வது நாளாக ஆலோசனை

    • பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
    • எந்திரத்தை பயன்படுத்துவதால் வாக்குகள் பதிவாகும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை மார்ச் 2-ம் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் அதிகாரிகள் குழு தமிழகம் வந்துள்ளது. அந்த குழுவில் தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஷ், துணை ஆணையர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகுல், முதன்மை செயலாளர் மல்லிக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    நேற்று அவர்கள் ஆலோசனையை தொடங்கினார்கள். முதல்கட்டமாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டனர். மொத்தம் 8 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஓட்டுப்பதிவின்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

    அதேசமயத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரம் (விவிபேட்) பயன்படுத்த தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எந்திரத்தை பயன்படுத்துவதால் வாக்குகள் பதிவாகும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    நேற்று பிற்பகல் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தமிழகத்தில் ஓட்டுப்பதிவின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

    இன்று (சனிக்கிழமை) 2-ம் நாள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யுடன் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்தியது.

    காலை 9 முதல் 11 மணி வரை, தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தந்த மாநிலங்களில் பாராளுமன்ற தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள முக்கிய ஏற்பாடுகள் குறித்த விவரங்களை காட்சிப்பட விளக்கங்களின் வாயிலாக தலைமைத் தோ்தல் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதைத் தொடா்ந்து, வருமான வரி புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

    Next Story
    ×