search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சந்திரயான்-3 விண்கலத்துடன் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. விமானத்தில் இருந்து பதிவு செய்த வீடியோ வைரல்
    X

    சந்திரயான்-3 விண்கலத்துடன் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. விமானத்தில் இருந்து பதிவு செய்த வீடியோ வைரல்

    • சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
    • மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. புவியின் சுற்றுப்பாதையில் நுழைந்து சுற்றி வரும் விண்கலத்தின் செயல்பாடு இயல்பாக உள்ளது. இந்த நீள்பட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அந்த வகையில் சுற்றுப்பாதையை உயர்த்தும் முதல் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. விண்கலம் இப்போது பூமிக்கு நெருக்கமாக 173 கிமீ, அதிகபட்ச தொலைவாக 41,762 கி.மீ. என்ற சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.

    கடந்த 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. வீடியோ எடுத்து வெளியிட்டன. அன்றைய தினம் முழுவதும் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வெளியாகின.

    அவ்வகையில், சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் (எல்விஎம்-3) சீறிப்பாய்ந்து சென்ற காட்சி விமானத்தில் இருந்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்ற விமானத்தின் ஜன்னல் வழியாக ஒரு பயணி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது அதில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர் (ஓய்வு) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பிவி வெங்கடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவை எடுத்த பயணியின் புகைப்படத் திறமையை சிலர் வியந்து பாராட்டி உள்ளனர்.

    Next Story
    ×