search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்- பெற்றோருக்கு ஐகோர்ட் உத்தரவு

    • நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறை தகவல்
    • ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாணவி பயன்படுத்திய சொல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது கேட்டதுடன், செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பனார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.

    இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

    Next Story
    ×