search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தரைப்பாலம் நீரில் மூழ்கியது- மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்

    • பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக்கொடுக்க பொது மக்கள் வேண்டுகோள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று விடியற்காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×