search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீர் குழாயில் உடைப்பு: 15 ஆயிரம் குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் பாதிப்பு
    X

    தண்ணீர் குழாயில் உடைப்பு: 15 ஆயிரம் குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் பாதிப்பு

    • தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். செங்கல்பட்டு நகர பகுதி முழுவதும் பயன்படுத்தும் வகையில் பழவேலி, இருகுன்றம்பள்ளி அருகே உள்ள பாலாற்று பகுதியில் கிணறுகள் அமைத்து அங்கிருந்து குழாய்களில் நகராட்சி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 1,5,6, 7,8,9,10 வார்டுகளில் பெரியநத்தம் பகுதியில் உள்ள களத்து மேடு, தூக்குமரகுட்டை, கைலாசநாதர் கோவில் தெரு, தட்டான் மலை தெரு, மற்றும் அனுமந்த பொத்தேறி, ராமபாளையம், சாஸ்திரி நகர் , பிள்ளையார் கோவில் தெரு மற்றும் மதுரை வீரன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 29,30 மற்றும் 31ஆகிய வார்டுகளில் 4 அல்லது 5நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விடப்படாததால் எப்போது தண்ணீர் வரும் என்று பொதுமக்கள் தினமும் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. காலிகுடங்களை குடிநீர் குழாய் உள்ள இடங்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கிறார்கள்.

    குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 10 வார்டுகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிநீரை கூடுதல் விலை கொடுத்து கடைகளில் வாங்கும் நிலை நீடித்து வருகிறது. குடிநீர் விநியோகத்துக்காக புதைக்கப்பட்ட குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவதே இந்த தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்று தெரிகிறது. சமீபத்தில் தட்டான்மலை தெரு வழியாக புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கால்வாயில் கலந்தது.

    இந்த குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பூமியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பே இதற்கு காரணம். இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கைலாசநாதர் கோவில் தெரு, தூக்குமர குட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு குழாய்களில் எப்போதும் காலி குடங்களுடன் குடி நீருக்காக காத்து கிடக்கின்றனர். சில இடங்களில் குடி நீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. குழாய்களில் தண்ணீர் வரும்போது சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர்.இதனால் தெரு குழாய்களுக்கு வரவேண்டிய குடிநீர் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    மேலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    எனவே குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தண்ணீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×