என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இளமாறன்.
பிறந்த நாளன்று ஏரியில் பிணமாக மிதந்த சிறுவன்- போலீஸ் விசாரணை
- தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசியில் குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தூசி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கீதா இவர்களுக்கு இளமாறன் (வயது8), என்ற மகனும் ரித்திகா (6) என்ற மகளும் இருந்தனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
இளமாறனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு தனது பெற்றோரிடம் பிறந்தநாள் கேக் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து சக மாணவர்களோடு விளையாடுவதற்காக வெளியில் சென்றார்.
நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்றிரவு தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசியில் குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தேரியில் காணாமல் போன சிறுவன் இளமாறன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவனின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
பிறந்த நாளில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






