என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற அழகிகள்.
நெல்லையில் அழகிப்போட்டி- மிடுக்கான உடையில் வலம் வந்து அசத்திய பெண்கள்
- திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர்.
- முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான 'மிஸ் அண்ட் மிஸ்ஸஸ்-நெல்லை' பட்டத்துக்கான அழகிப்போட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கும், 12 முதல் 18 வயதிலானவர்களுக்கும், 3-வது பிரிவாக 50 வயது வரையான பெண்களுக்கும் போட்டி நடைபெற்றது.
திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர். தொடர்ந்து பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மருதாணி வைத்தல், பாரம்பரிய உடை, நவநாகரிக உடை என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
திருமணம் ஆனவர்களுக்கான போட்டியில் முதல் இடத்தை போடியை சேர்ந்த டாப்னியும், 2-வது இடத்தை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தேவியும் தட்டிச்சென்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமணமாகாத பெண்களுக்கான அழகி போட்டியில் முதல் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அணா பாலனும், 2-வது இடத்தை நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகரை சேர்ந்த அபர்ணாவும் தட்டி சென்றனர்.
முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெகந்தி போட்டி, ஆடை அலங்கார போட்டி, சிறுவர்களுக்கான மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும், தனியாக தொழில் செய்ய மன தைரியத்தை உருவாக்கவும், கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தவும் இதுபோன்ற போட்டிகள் நடத்தி வருவதாக விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.






