search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆயுத பூஜை சிறப்பு பஸ்கள் நிரம்பின: சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள் கூட்டத்தால் நெரிசல்
    X

    ஆயுத பூஜை சிறப்பு பஸ்கள் நிரம்பின: சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள் கூட்டத்தால் நெரிசல்

    • கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
    • வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    சென்னை:

    ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளியூர் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கி வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    ஆன்மிக தலங்கள், சுற்றுலா மையங்களுக்கு குடும்பமாக செல்வதால் பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்களும், பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து இன்று வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மதுரவாயல் பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களில் சொந்த ஊர் செல்வதற்கு மாலையில் இருந்தே கூட்டம் கூடத்தொடங்கும் என்பதால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

    சென்னையில் இருந்து மொத்தம் 3100 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளையில் இருந்து விடுமுறை என்பதால் கார்களிலும் பயணத்தை மேற்கொண்டனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன.

    வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே களை கட்டியது. கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும் நிரம்பி காணப்பட்டன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதில் இடங்களை பிடிக்க பயணிகள் போட்டி போட்டனர்.

    குருவாயூர், சோழன், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன், தேஜாஸ், வந்தே பாரத் உள்ளிட்ட பகல் நேர ரெயில்களில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.

    மாலையில் புறப்பட்டு செல்லக்கூடிய கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பியதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க 3 மணி நேரத்திற்கு முன்னதாக காத்து நின்றனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று எல்லா பிளாட்பாரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    இன்று மாலையில் இருந்து படிப்படியாக கூட்டம் அதிகரித்து நள்ளிரவு வரை பஸ்களில் பயணம் செய்யக்கூடும் என்பதால் அதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையும் அதிகளவில் மக்கள் வெளியூர் புறப்பட்டு செல்வதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×