search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை- அரசு விரைவு பஸ்களில் 15 ஆயிரம் பேர் முன்பதிவு
    X

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை- அரசு விரைவு பஸ்களில் 15 ஆயிரம் பேர் முன்பதிவு

    • ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.
    • அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லக்கூடிய மக்கள் பஸ், ரெயில்களில் பெரும்பாலும் பயணம் செய்வார்கள்.

    அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் பஸ் பயணத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள்.

    பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வசதி இருப்பதால் தற்போது அரசு விரைவு பஸ்களில் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களை மக்கள் நாடுகிறார்கள்.

    tnstc.in.com என்ற இணையதளத்தின் வழியாக அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் இருந்து 450 அரசு விரைவு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. அதில் 400 பஸ்களுக்கான முன்பதிவு பெருமளவில் நிறைவடைந்துள்ளன.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மதுரை, தென்காசி, செங்கோட்டை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் வருகிறது. முன்னதாக 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாகும். தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அக்டோபர் 1, 2-ந்தேதி பயணம் செய்வதற்கும் அதிகளவில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. தீபாவளி, ஆயுத பூஜை விடுமுறை முன்பதிவு அரசு விரைவு பஸ்களில் விறுவிறுப்பாக நடைபெறுவதால் குறைந்த அளவிலேயே இடங்கள் இருக்கின்றன.

    இதுவரை 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி முடிந்து மறுநாள் சென்னை திரும்புவதற்கான முன்பதிவு நாளை மறுநாள் (25-ந்தேதி) தொடங்குகிறது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை பயணத்திற்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து புறப்படக்கூடிய பஸ்களில் குறைந்த அளவில் இருக்கைகள் காலியாக உள்ளன.

    கடைசி நேரத்தில் நெரிசலில் பயணம் செய்வதை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது. அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரப்பிய பின்னர் மற்ற போக்குவரத்து கழக பஸ்களும் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர 1,000 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை விடவும் தயார் நிலையில் உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×