search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனமோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்
    X

    ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனமோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்

    • சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    சென்னை:

    ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

    சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை உண்மை என்று நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது.

    இந்நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.கே.சுரேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    தற்போது ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருக்கிறார். அவர் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×