search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
    X

    வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

    • உழவையும், உழவர்கள் நலனையும் பறிகொடுத்து விட்டு, எந்தத்தொழில் திட்டங்களையும் செயல்படுத்த தேவையில்லை.
    • வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள புத்தூர், ஆட்கொண்ட நத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் நிலக்கரி வளம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

    வீராணம் பகுதியில் உள்ள நிலக்கரி வளத்தின் துல்லியமான அளவு என்ன? அவற்றின் வெப்பத்திறன் என்ன? என்பதை கண்டறியும் பணியில் எம்.இ.சி.எல். எனப்படும் தாதுவளம் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை மத்திய அரசின் சுரங்கத்துறை ஈடுபடுத்தியுள்ளது. 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், உழவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவை எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படலாம். ஆய்வு முடிவடைந்த பின்னர் அப்பகுதியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படலாம் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர்.

    வீராணம் பகுதியில் மட்டும் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தை மட்டுமின்றி, அருகில் உள்ள அரியலூர் மாவட்டத்தையும் அழிப்பதற்கு சமமான செயலாகும். வீராணம் ஏரி பகுதியை ஒட்டியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய வட்டங்கள் வளம் கொழிக்கும் பூமி ஆகும். இந்த 3 வட்டங்களிலும் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதிகளில் 2 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் வேளாண்மையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் மட்டுமின்றி, 25 கி.மீ சுற்றளவில் உள்ள நிலங்களும் அவற்றின் வளத்தை இழந்து மலடாகி விடும்.

    அதனால், அப்பகுதியில் உள்ள 2 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரங்களை இழப்பது மட்டுமின்றி, வீடுகளையும் இழந்து அகதிகளாக வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்படும்.

    மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதற்கு மாறாக கடலூர் மாவட்டத்தின் வளம் கொழிக்கும் தென் பகுதியையும் சீரழிக்கும் திட்டத்திற்காக ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கிறது.

    உழவையும், உழவர்கள் நலனையும் பறிகொடுத்து விட்டு, எந்தத்தொழில் திட்டங்களையும் செயல்படுத்தத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக விளைநிலங்களை பறிப்பதையும், பலி கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    எனவே, வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். வீராணம் சுரங்கத் திட்டத்திற்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக்கூடாது. இதற்காக எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×