search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜயலட்சுமி புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை: சீமானுக்கு போலீசார் நேரில் சம்மன்
    X

    விஜயலட்சுமி புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை: சீமானுக்கு போலீசார் நேரில் சம்மன்

    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது மீண்டும் புகார் அளித்து இருந்தார்.
    • விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பாலியல் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது மீண்டும் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியும் விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து சீமானுக்கு சம்மன் வழங்கி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி கடந்த வாரம் கோவை சென்றிருந்த சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அப்போதே அவரை போலீசார் கைது செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சம்மன் கொடுப்பதற்காகவே போலீசார் சென்றிருப்பதாக கூறப்பட்டது. அப்போது அவரிடம் சம்மன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சீமானிடம் போலீசார் நேற்று இரவு நேரில் சம்மன் வழங்கி உள்ளனர். சென்னை பாலவாக்கம் சக்தி மூர்த்தி அம்மன் நகரில் வசித்து வரும் சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார் அவரிடம் சம்மனை நேரில் வழங்கினர்.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் இந்த சம்மன் சீமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதைதொடர்ந்து சீமான் இன்று போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை என்றும் வருகிற 12-ந்தேதி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இதன் மூலம் அன்று சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீமான் மீது விஜயலட்சுமிஅளித்துள்ள புகார் மீது போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சீமான் மீது போலீசார் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட தாக கூறி இருந்தார். இதற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி சீமானை விசாரணைக்கு அழைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×