search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

    • 10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால் இந்தமுறை ஆடி அமாவாசைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள் என தெரிகிறது. இதையொட்டி வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×