search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய ஒற்றை காட்டு யானை- பீதியில் உறைந்து போன பயணிகள்
    X

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய ஒற்றை காட்டு யானை- பீதியில் உறைந்து போன பயணிகள்

    • சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
    • பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரையொட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டங்கள் என மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அதிகளவில் நடமாடி வருகிறது.

    அவ்வாறு வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியும், அதனையொட்டிய விளைநிலங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதுதவிர சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் 27-வது மைல் பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலையின் குறுக்கே வந்தது. தொடர்ந்து பஸ்சை வழிமறித்தபடி நின்றது.

    யானை வந்ததை பார்த்த பஸ் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்திவிட்டார். யானை மறித்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

    பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது. இதனால் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை பின்னோக்கி இயக்கினார்.

    ஆனாலும் யானையும் பஸ்சை நோக்கி முன்னேறி கொண்டே வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மிகவும் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர்.

    தொடர்ந்து முன்னேறி வந்த யானை பஸ்சின் அருகே வந்து நின்று கொண்டு பிளிறியது.

    இதனால் யானை பஸ்சை தாக்கிவிடும் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் காட்டு யானை பஸ்சின் இடதுபுறமாக சென்றவாறு வழிவிட்டது.

    இதனால் பயணிகள் பயத்தில் மீண்டும் சத்தம் போட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காட்டு யானை ஒதுங்கி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி ஊட்டியை நோக்கி புறப்பட்டார்.

    அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டபுள் ரோடு அருகே ஒற்றை யானை 2 முறை சாலையைக் கடந்து வனத்துறைக்கு போக்கு காட்டியது. இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

    யானை நடமாட்டத்தால் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

    Next Story
    ×