search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    108 ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் 4 மாத கர்ப்பிணி பலி
    X

    உயிரிழந்த சந்தியா.

    108 ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் 4 மாத கர்ப்பிணி பலி

    • வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
    • 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.

    இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×