search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரேசன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
    X
    ரேசன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

    மதுரையில் 21,000 கிலோ ரேசன் அரிசி பதுக்கிய 12 பேர் கைது

    மதுரை மாநகரில் 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியதாக 12 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடோனில், டன் கணக்கில் ரேஷன் அரிசிகள் பதுக்கப்பட்டு இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரன் (அவனியாபுரம்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தனியார் பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஒரு குடோனில் 20-க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும், தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் விரட்டிச்சென்று 12 பேரை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் கீரைத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, கொரில்லா முத்து (வயது 45), வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, சரலைப்பள்ளி ராம்கி (33), வலையங்குளம், பெருமாள் நகர் அருணாசலம் (28), வில்லாபுரம், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, மாயழகு மகன் மணிகண்டன் (24), திருப்பரங்குன்றம், திருமலையூர் முருகன் மகன் அர்ஜுன் (24), கீரைத்துறை, பசும்பொன் நகர், ரமேஷ் மகன் விக்னேஷ் 22), கீரைத்துறை, பிள்ளையார் கோவில் சந்து முருகன் மகன் அருண்பாண்டி (23), கீரைத்துறை மலைச்சாமி மகன் சேதுபதி (22), செல்லூர், மணவாளநகர், பாண்டித்துரை மகன் நவீன்குமார் (21), வலையங்குளம், பெருமாள் நகர், முத்துலிங்கம் மகன் சக்திவேல் (20), மேல அனுப்பானடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, தமிழரசன் (25) என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளில், டன் கணக்கில் தூத்துக்குடிக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அங்கு உள்ள மில்லில் இவை பாலிஷ் செய்யப்படுகின்றன. அதன்பிறகு ரேஷன் அரிசி மூட்டைகள், பெங்களூரு, திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு இருந்து மேற்கண்ட அரிசி மூட்டைகள், “கர்நாடகா பொன்னி’ என்ற பெயரில் மீண்டும் தமிழகத்திற்கே விற்பனை கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    முன்னதாக தனிப்படை போலீசார் குறிப்பிட்ட குடோனில் அதிரடியாக சோதனை செய்து பார்த்தனர். அப்போது அங்கு 47 கிலோ எடை உள்ள 450 அரிசி மூட்டைகளில் மொத்தம் 21 ஆயிரத்து 150 கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மதுரை மாநகரில் 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியதாக 12 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×