search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கமி‌ஷனர் சங்கர் ஜிவால்
    X
    கமி‌ஷனர் சங்கர் ஜிவால்

    கஞ்சா-போதை பொருட்களை யார் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

    போதை பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்கள் கசிய விடக்கூடாது என போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவாலிடம் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து காவலர் சக்திவேல் விற்பனை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக 2 காவலர்களும், முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்களை காவல் துறையினர் கசிய விடக்கூடாது.

    அது போன்று பொதுமக்கள் பற்றிய தகவல்களை காவலர்கள் யாராவது வெளியிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடற்கரை பகுதிகளுக்கு ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சென்று வருவதற்கு குறிப்பிட்ட நேர அளவீடு எதுவும் வகுக்கப்படவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருக்கும் ஆடியோ குறித்தும் கமி‌ஷனர் சங்கர் ஜிவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டால் அது குற்றமாகவே கருதப்படும். அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் ஆடியோ தொடர்பாக புகார் வந்தால் சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×