என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைது
வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம்- கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேலூரில் பெண் டாக்டரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த மாதம் 17-ந்தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர்.
படம் முடிந்து இரவு 1 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறினர்.
இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார்.இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.
காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.
அப்போது பெண் டாக்டர் ஆட்டோ திசை மாறி செல்கிறதே ஏன் என்று கேட்டார். அந்த பாதையில் வேலை நடப்பதால் சுற்றி செல்வதாக கூறினார்.
கலெக்டர் அலுவலகம் சர்வீஸ் ரோட்டில் வந்த ஆட்டோ பாலாற்றங்கரைக்கு சென்றது. அப்போது பெண் டாக்டரும், அவருடன் வந்த நண்பரும் ஆட்டோவில் இருந்தவர்களிடம் எங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறினர்.
2 பேரையும் பாலாற்றின் கரைக்கு கடத்திச்சென்று அவர்களை தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டுகள் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆண் நண்பரை 2 பேர் ஆட்டோவில் அழைத்து சென்று வேலூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் அவர்களது கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.40,000 பணம் எடுத்தனர்.
மேலும் பெண் டாக்டரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பெண் டாக்டர் பணம் நகையை எடுத்து விட்டீர்கள்.தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சி கேட்டும் இந்த கும்பல் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மிருகத்தனமாக நடந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஆன்லைன் மூலமாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துவாச்சாரி வ.உ.சி நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 20), சந்தோஷ்குமார் (22,), நேரு நகரை சேர்ந்த பாரத் (18), மணிகண்டன்(21) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
சிறுவன் சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளி காப்பகத்தில் அடைக்கப்பட்டார். மற்றும் 4 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 17 வயது சிறுவனை தவிர்த்து மற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை ஜெயிலில் உள்ள 4 பேரிடம் போலீசார் வழங்கினர்.
Next Story






