என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகை அருகே அரசு கொள்முதல் நிலைய பூட்டை உடைத்து 125 நெல்மூட்டைகள் திருட்டு
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலைபார்க்கும் காவலாளி நேற்று இரவு விடுப்பு எடுத்து விட்டு சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் 2 லாரியில் நள்ளிரவில் அங்கு வந்தனர். பின்னர் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் மூட்டைகளில் 125 மூட்டைகளை திருடி லாரியில் ஏற்றிகொண்டு தப்பி சென்றனர். இன்று காலை நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாக்யராஜ் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






