search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குழந்தை கொலை வழக்கில் திருப்பம்- கள்ளக்காதல் ஜோடி பரபரப்பு வாக்குமூலம்

    முத்துமாரி, சசிகுமார் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பச்சிளம் குழந்தை குளத்து கரையில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்த சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியான சசிகுமார்- முத்துமாரி ஆகியோருக்கு தகாத உறவால் குழந்தை பிறந்தது என்றும், அவர்கள் அந்த குழந்தையை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படையினர் கைது செய்து சேர்ந்தமரம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்களுக்கு கள்ளக்காதலில் மேலும் ஒரு குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையையும் கொன்று புதைத்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து விவரம் வருமாறு :-

    சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 37). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த முத்துமாரிக்கு, சுரண்டை அருகே உள்ள வடநத்தம்பட்டியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதில் முத்துமாரி கர்ப்பம் அடைந்துள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில், கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய 2 பேரும் குழந்தை பிறந்த 5-வது நாளில், யாருக்கும் தெரியாமல் குளத்து கரையில் குழந்தையை வீசி கொன்றுள்ளனர்.

    பின்னர் வெளியூர் சென்ற ஜோடி சிறிதுகாலம் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முத்துமாரிக்கு மீண்டும் கள்ளக்காதல் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு அருகிலேயே உள்ள முட்புதர் பகுதியில் இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் மண்ணுக்குள் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், கடையநல்லூர் தாசில்தார் அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் முத்துமாரியை அழைத்து கொண்டு சென்றனர்.

    குழந்தையை புதைத்த இடத்தை முத்துமாரி அடையாளம் காட்டியவுடன் அங்கு தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் குழந்தையின் எலும்புகள் மட்டுமே சிக்கின. அவை தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முத்துமாரி, சசிகுமார் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான முத்துமாரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் என்னை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்றி கொள்வதற்காக சசிகுமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தேன்.

    நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் நான் கர்ப்பமாகிவிட்டேன். அந்த கருவை கலைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. வெளியே தெரிந்தால் எங்களது உறவினர்கள் எங்களை அவமானமாக நினைப்பார்கள் என்பதால் குழந்தை பிறந்தவுடன் அதனை குளத்து கரையில் வீசி கொலை செய்தோம்.

    பின்னர் அடுத்த ஆண்டே மீண்டும் நான் கர்ப்பமானேன். வேறு வழியில்லாமல் அந்த குழந்தை பிறந்தவுடன் வீட்டுக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்தேன். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் 2 பேரும் சென்னைக்கு சென்று குடியேறினோம். ஆனால் போலீசார் துப்பு துலக்கி எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×