என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியில் மண்டல குழு தலைவர்கள் பதவிக்கு தி.மு.க.வினர் 4 பேர், ஒரு சுயேட்சை தேர்வு
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடந்தது. தேர்தலை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நடத்தினார்.
தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்கள் உள்ளன. இதில் 4 மண்டலங்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஏகமனதாக மண்டல குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மண்டலம் 1 - வெ.கருணாநிதி, மண்டலம் 2- இ.ஜோசப் அண்ணாதுரை, மண்டலம் 4- டி.காமராஜ், மண்டலம் 5- எஸ்.இந்திரன் ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மண்டல குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
3-வது மண்டலமான செம்பாக்கத்தில் திமுக சார்பில் மகாலட்சுமி கருணாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 40- வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற பிரதீப் சந்திரன் போட்டியிட்டார்.
மொத்தம் உள்ள 14 வாக்குகளில் இருவருக்கும் சமமாக தலா 7 வாக்குகள் கிடைத்தன. அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் பிரதீப் சந்திரனுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் குலுக்கல் முறை கையாளப்பட்டது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதீப் சந்திரன் வெற்றி பெற்றார்.
ஆவடி மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் மண்டல குழு தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்டவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தேர்தலை மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி நடத்தினார்.
ஆவடி மாநகராட்சி மண்டலம் 1- வி.அம்மு, மண்டலம் 2- எஸ்.அமுதா, மண்டலம் 3- ராஜேந்திரன், மண்டலம் 4- என்.ஜோதி லட்சுமி ஆகியோர் மண்டல குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






