என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டாசு தொழிற்சாலை
    X
    பட்டாசு தொழிற்சாலை

    சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் 21-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்

    சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் 21-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
    சிவகாசி:

    பட்டாசு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அதிக நச்சு புகை, சத்தத்தை வெளியிடும் பட்டாசுகள் உற்பத்திக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

    அண்மையில் சரவெடி, பேன்சி ரக பட்டாசுகளுக்கும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் 50 சதவீத பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.

    இந்த சூழலில் விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொடர்ந்து கெடுபிடி செய்வதாக பட்டாசு ஆலை தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டாசு ஆலையில் சோதனை செய்த அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலைக்கும் சீல் வைத்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது.

    இதை கண்டித்தும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டியும், சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்தத்தால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×