search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற வீரர்கள்
    X
    ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற வீரர்கள்

    திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

    திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு போட்டி தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் 700 மாடுகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டை ஏ.டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ், வடமதுரை இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

    இதில் காளைகள் முட்டியதில் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, கட்டில், பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, துவரங்குறிச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




    Next Story
    ×