என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவி சாய்சோனு இன்று குடும்பத்தினருடன் சென்று அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
24 மணி நேரமும் திக்.. திக்... பயணம் - குன்னூர் மாணவி சாய்சோனு பேட்டி
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரிக்கு பஸ்சில் பயணிக்கு ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டதாக குன்னூர் மாணவி சாய்சோனு தெரிவித்துள்ளார்.
கோவை:
உக்ரைனில் மருத்துவம் படித்த கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் ஹங்கேரி வழியாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தனர்.
விமானநிலையத்தில், அவர்களை பெற்றோர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
உக்ரைனில் நிகழ்ந்த துயர சம்பவம் பற்றி குன்னூர் மாணவி சாய் சோனு கூறியதாவது:-
நான் உக்ரைனில் உள்ள வென்சிலா பகுதியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் தமிழகம், இந்தியாவை சேர்ந்த மாணவிகளும் படித்து வந்தனர்.
போர் பதற்றம் என அறிவித்ததும், 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் என அனைத்தையும் வாங்கி கொண்டோம். இருப்பினும் உக்ரைனில் நீடித்த போர் பதற்றத்தால் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். என்னுடன் படித்த இந்தியர்களும் நாட்டிற்கு செல்ல தயாராகினர்.
இதையடுத்து அனைவரும் உக்ரைனின் மேற்கு பகுதி அருகே இருக்கும் ருமேனியா எல்லைக்கு செல்வதற்கு தயாரானோம். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக வந்த தகவலால் திட்டத்தை மாற்றி ஹங்கேரிக்கு பஸ்சில் பயணித்தோம். என்னுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் பயணமாகினோம். அனைவரும் இந்திய தூதரகம் அறிவுறுத்திய படி இந்திய தேசிய கொடியை அணிந்து கொண்டு பயணமானோம்.
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரிக்கு பஸ்சில் பயணிக்கு ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. 12 மணி நேர பயணித்திற்கு பிறகு ஹங்கேரி எல்லையில் உள்ள உக்ரோத் ரெயில் நிலையத்தை அடைந்தோம்.
அங்கிருந்து ரெயிலில் மீண்டும் 12 மணி நேரம் பயணித்து ஹங்கேரியை அடைந்தோம். எல்லை பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது. குளிரை பொருட்படுத்தாமல், ஊருக்கு செல்வதிலேயே கவனம் செலுத்தினோம்.
எங்களை ஹங்கேரி பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். எங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டனர். எங்களை 24 மணி நேரம் கண்காணித்து, தேவையானதை வழங்கு வதற்கு என்று தனியாக அதிகாரிகளையும் நியமித்திருந்தனர். அவர்கள் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தோம். அங்கு மத்திய மந்திரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, எனது ஊரான குன்னூருக்கு சென்று விட்டேன். போருக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்து கொண்டு தற்போது ஊருக்கு வந்தது சேர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் உக்ரைனில் இருந்து திரும்பிய மற்ற மாணவர்கள் கூறும்போது, போர் தீவிரமாக இருப்பதால், உக்ரைன் கிழக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.நாங்கள் மேற்கு பகுதியில் இருந்ததால் ஹங்கேரி நாட்டுக்கு வர முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் சிறப்பாக செய்திருந்தது.ஹங்கேரியில் வசிக்கும் தமிழ் மக்கள் எங்களுக்கு மிகவும் உதவினர். உயிரை பணயம் வைத்து, சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தோம். தாய் நாடு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
Next Story






