search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலை
    X
    தற்கொலை

    மாணவி லாவண்யா தற்கொலைக்கு சித்தி கொடுமை காரணமா?- சைல்டு லைன் உறுப்பினர் அறிக்கை

    பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக திருமானூர் சைல்டு லைன் அணி உறுப்பினர் ஒரு அறிக்கையை தயார் செய்து அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கையை கொடுக்க வந்துள்ளார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுக பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து முருகானந்தம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

    முதல் மனைவிக்கு பிறந்த மகள் லாவண்யாவை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முருகானந்தம் சேர்த்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15-ந்தேதி இறந்தார்.

    தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார். மேலும் மதமாற்ற பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்தநிலையில் அவர் சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இவருடைய சித்தி கொடுமை என 1098 சைல்டு லைனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர்கள் மாணவி லாவண்யாவின் வீட்டுக்கு சென்று கவுன்சிலிங் வழங்கியுள்ளனர். அப்போது மாணவி, சித்தி தன்னை கொடுமைப்படுத்தவில்லை என கூறியதாக தெரிகிறது.

    மேலும் தொடர்ந்து நான்கு மாதங்கள் 4 முறை சைல்டு லைன் அமைப்பின் உறுப்பினர் வீட்டுக்கே சென்று விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    அப்போது மாணவி லாவண்யா, மீண்டும் மீண்டும் சித்தி தன்னை அடிக்கவில்லை என கூறியதாகவும், மேலும் அப்பொழுதும் கவுன்சிலிங் வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தநிலையில் இது தொடர்பாக திருமானூர் சைல்டு லைன் அணி உறுப்பினர் ஒரு அறிக்கையை தயார் செய்து அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மூடி சீல் வைக்கப்பட்ட அறிக்கையை கொடுக்க வந்துள்ளார்.

    அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இது குறித்த விசாரணை தஞ்சாவூரில் நடப்பதால் தஞ்சாவூர் டி.எஸ்.பி.யிடம் அந்த அறிக்கையை கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×