என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி வரதராஜ் - விவசாயி மாறன்
    X
    சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி வரதராஜ் - விவசாயி மாறன்

    சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட விவசாயிகள்- படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

    சிறுத்தை நடமாடிய பாப்பாங்குளம் பகுதியையொட்டி எந்த வனப்பகுதியும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி இங்கு வந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது பாப்பாங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாறன் (62). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டு உள்ளார். இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் வரதராஜ் (61).

    மாறன் இன்று காலை 7 மணியளவில் தனது தோட்டத்தில் சோள பயிர்களை அறுவடை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை திடீரென மாறன் மீது பாய்ந்தது.

    இதையடுத்து மாறனை கடுமையாக தாக்கியது. மாறனும் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க கட்டிப்புரண்டு போராடினார். ஆனாலும் சிறுத்தை விடாமல் அவரை தாக்கியது. இதில் மாறனுக்கு நெஞ்சு, வாய் உள்பட உடல் முழுவதும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    அப்போது மாறன் வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயி வரதராஜ் ஓடி வந்தார். அப்போது மாறன் சிறுத்தையுடன் போராடி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வரதராஜும் சிறுத்தையை விரட்ட முயன்றார். அப்போது அவரையும் சிறுத்தை தாக்கியது. இதில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறுத்தை ஒரே நேரத்தில் 2 பேரையும் தாக்கிக் கொண்டு இருந்தது.

    அவர்கள் சிறுத்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வெங்கடாச்சலம் (48) என்ற விவசாயியையும் சிறுத்தை தாக்கியது. இதில் அவர் தப்பி ஓடி விட்டார். ஒரு கட்டத்தில் விவசாயிகள் மாறன், வரதராஜ் ஆகியோரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பியது.

    விவசாயிகளை சிறுத்தை தாக்கியது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் காயம் அடைந்தவர்களின் மேல் இருந்த சிறுத்தையின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை தாக்கியது உறுதியானது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். மேலும் சிறுத்தை அந்த பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 2 விவசாயிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுத்தை நடமாடிய பாப்பாங்குளம் பகுதியையொட்டி எந்த வனப்பகுதியும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி இங்கு வந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பாப்பாங்குளம் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டம் வழியாக வழிதவறி சிறுத்தை வந்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

    மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக இன்று காலை பாப்பாங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×