search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்
    X
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள்- 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன.
    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். அதிலும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.

    ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று (தை மாதம் 3-ம் நாள்) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் பொங்கல் நாளில் அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடந்தது.

    3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். ஆனால் அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு இன்று (17-ந் தேதி) அரசு வழிகாட்டுதல்படி கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றது.

    அதிகாலை 6.30 மணிக்கு காளியம்மன் கோவில் அருகில் உள்ள வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் திரண்டனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் காளைகளும் வரிசைகட்டி நின்றன. கலெக்டர் அனிஷ்சேகர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    அதன் பிறகு அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் தகுதி பெற்ற 700 காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் கலந்து கொண்டன. இதில் சில காளைகள் களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காளைகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் பின்வாங்கினர்.

    அதே நேரத்தில் பல காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் மடக்கி பரிசுகளை வென்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதி பெற்ற 300 மாடுபிடி வீரர்களும் ஒவ்வொரு சுற்றாக 50 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி தேர்வு பெறும் சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    மேலும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் பிடிபடாத அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைகளை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து முடிவெடுக்க உள்ளனர். அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறுபவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் சைக்கிள். வேட்டி, துண்டு, உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு திடலில் தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது.

    பார்வையாளர்கள் அமருவதற்காக காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், கேலரி, மாடுகள் நிறுத்தப்படும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். காயம் அடைந்த வீரர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்சு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ் வொரு சுற்று முடிவிலும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருந்தது.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 31 துணை சூப்பிரண்டுகள், 7 கூடுதல் சூப்பிரண்டுகள், 62 காவல் ஆய்வாளர்கள், 182 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வெளியூரில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் தானியங்கி ஒலிபெருக்கி மூலம் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை வீட்டிலிருந்த படியே தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் மூலமாக கண்டுகளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.



    Next Story
    ×