search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது
    X
    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது- அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி நடைபெறுமா?

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
    அலங்காநல்லூர்:

    ஜல்லிக்கட்டு என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் தான். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

    இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் உள்ளனர். ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதால் அங்கு வாடிவாசல், தடுப்புக்கட்டைகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

    15-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் பாலமேடு, 16-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதிகளில் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், போட்டிகளில் பங்கேற்கும், காளையர்கள், காளைகளுக்கு பரிசுகள் வழங்குவது குறித்தும் விழா கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மேலும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனுவும் கொடுத்துள்ளனர்.

    அடுத்த கட்டமாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

    கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவக்குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதித்தனர். நாட்டு காளைமாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையர்களுக்கான பதிவு, மருத்துவ பரிசோதனை போன்றவை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

    கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால்கோள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. இதற்கு காரணம் கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதுதான். இதனை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு போன்றவை தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    முக ஸ்டாலின்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவக்குழுவினர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் முடிவில்தான் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறுமா? என தெரியவரும்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் காளையர்கள், பார்வையாளர்கள் எப்படி வருவார்கள்? இதற்கு தனி அனுமதி கிடைக்குமா? என்பதும் அரசின் கையில் தான் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என விழா குழுவினர் உறுதியாக உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16-ந் தேதி அரசு வழிகாட்டுதல்படி சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தயாராக உள்ளோம். அரசின் நல்ல முடிவை எதிர்நோக்கி அதற்கான பணிகளை தொடங்க ஜல்லிக்கட்டு விழா குழு தயாராக உள்ளது.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Next Story
    ×