search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொங்கல் கரும்பு வரத்து குறைந்தது

    கடந்த வருடம் ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு விளைச்சலில் பாதிப்பு இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
    சென்னை:

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கரும்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் கரும்பை வைத்து இறைவனுக்கு படைப்பார்கள்.

    இதனால் கரும்பு விற்பனை அமோகமாக இந்த காலத்தில் இருப்பது உண்டு. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 1000 லாரிகளில் கரும்பு வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்திலும் கரும்பு கட்டு ரூ.300 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது.

    இந்த வருடம் அதைவிட குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெய்த கனமழையால் கரும்பு விளைச்சலில் பாதிப்பு இல்லை. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்துள்ளது.

    இதனால் கோயம்பேடு வியாபாரிகளுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய கரும்பு முழுமையாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு குறைந்த அளவில் கரும்பு வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுவாக பொங்கலுக்கு முந்தைய 5 நாட்களாக கரும்பு விற்பனை தொடங்கும். 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சேலம், தருமபுரி, மதுரை, ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கரும்புகள் லாரிகளில் குவியும்.

    இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக பொங்கல் பரிசு தொகுப்பிற்காக கரும்புகளை மொத்தமாக வாங்கிவிட்டதால் குறைந்த அளவில் தான் கோயம்பேடுக்கு வரும் என்று வியாபாரி முத்துக்குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த பொங்கலுக்கு 500 லாரிகளில் கரும்புகள் கோயம்பேடுக்கு வந்தாலே பெரிய வி‌ஷயமாகும். சென்ற வருடத்தைவிட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒரு கரும்பு கட்டு (15 எண்ணிக்கை) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை ஆக கூடும். ஒரு கரும்பின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த வருடம் ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு விளைச்சலில் பாதிப்பு இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை.

    செழிப்பான அளவுக்கு விளைச்சல் உள்ள அதே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து விற்பதை விட அதே விலைக்கு அரசுக்கு மொத்தமாக வியாபாரிகள் கொடுத்து விட்டனர்.

    ஆனாலும் பொங்கல் கரும்பு விற்பனை 8-ந்தேதி முதல் சூடுபிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×