search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி அருகே சுடுகாட்டில் மழையில் நனைந்தபடி தகன மேடையில் தனலட்சுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த காட்சி.
    X
    திருச்சி அருகே சுடுகாட்டில் மழையில் நனைந்தபடி தகன மேடையில் தனலட்சுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த காட்சி.

    கிராமத்து மயானத்தில் தகன மேடை இல்லாததால் நனைந்த பெண் உடல்

    மழைக்காலங்களில் கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால் அவருக்கு இறுதி காரியங்களை செய்து முடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொடியாலம் ஊராட்சிக்கு உட்பட்ட சப்பாணிகோவில் தெருவில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சேர்ந்த மாரி முத்து என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 39) நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார்.

    அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அன்று மாலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்வதற்காக கொண்டு சென்றனர். சுடுகாட்டில் கொட்டகையுடன் கூடிய போதிய தகன மேடை வசதி இல்லாததால் திறந்தவெளி தரையில் விறகு, வரட்டி உள்ளிட்ட பொருட்களை அடுக்கி தகன மேடை அமைத்து அதன் மேல் தனலட்சுமி உடலை வைத்தனர்.

    தொடர்ந்து எரியூட்டுவதற்கு முன்பான சடங்குகள் செய்ய ஆரம்பித்தனர். அப்போது திடீரென கனமழை பெய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் உறவினர்கள் மழையில் விறகு நனைந்து விட்டால் இறந்தவர் உடலை எரியூட்ட முடியாமல் போய்விடும் என பரிதவித்தனர்.

    அங்குமிங்கும் ஓடி அருகில் இருந்த பனை மரங்களில் இருந்து பனை ஓலைகளை பிய்த்து தகன மேடையை சுற்றி நின்று பனை ஓலைகளால் குடைபோல் அமைத்தனர். இருப்பினும் அதிக மழையின் காரணமாக தகன மேடை மற்றும் தனலட்சுமியின் உடல் மழையில் முழுமையாக நனைந்து விட்டது.

    இதனால் விரக்தியடைந்த உறவினர்கள் மழை நிற்கும் வரை சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் மழை விட்டதும் ஈரமடைந்த தனலட்சுமி உடலை வாகனத்தின் டயர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தீமூட்டி எரித்து தகனம் செய்தனர். இது தொடர்பான காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கூறுகையில், சப்பாணி கோவில் தெருவுக்கு என உள்ள சுடுகாட்டில் கடந்த 40 வருடமாக தகன மேடை மற்றும் தண்ணீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திதரவில்லை. இது குறித்து பல முறை நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டோம். இருப்பினும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மழைக்காலங்களில் கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால் அவருக்கு இறுதி காரியங்களை செய்து முடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் இரவு 12 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது என்றார்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சப்பாணி கோவில் தெருவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் தகன மேடை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×