search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள், ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் பொருட்கள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள், ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் பொருட்கள்

    திருமங்கலம் அருகே 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்த தோட்ட உரிமையாளர் கைது

    கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு உடந்தையாக இருந்தது யார்? பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், இதுவரை எவ்வளவு மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டுள்ளனர்? என சாப்டூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சலுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 53). இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இவரது தோட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். உடனே பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதியவரின் உடலை எரிக்க ஆயத்தமானார்கள்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாப்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் மதுரை அருகே உள்ள துவரிமானை சேர்ந்த இளங்கோவன் என தெரியவந்தது.

    இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மேல் விசாரணைக்காக பாண்டியை போலீசார் சாப்டூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்ற னர். அங்கு அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித் தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்தில் சோதனை செய்ய முடிவு செய்து அங்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் உள்ள அறையில் 500, 200 ரூபாய் கட்டுகள் இருந்தன.

    போலீசார் அதனை ஆய்வு செய்தபோது அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் இதனை அச்சடிக்க பயன்படுத்தப்படும் ஜெராக்ஸ் எந்திரம், மை மற்றும் உபகரணங்கள் அந்த அறையில் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்பாக பாண்டி கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது வேறொரு வழக்கில் அங்கிருந்த இளங்கோவனுக்கும், பாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சலுப்பப்பட்டியில் உள்ள தோட்டத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித் துள்ளனர்.

    6 மாதங்களாக இதனை செய்துவந்துள்ள அவர்கள் தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இதற்கு மூளையாக இளங்கோவன் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இளங்கோவன் இறந்துள்ளார். அவரது உடலை எரிக்க முயன்றபோது பாண்டி கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு உடந்தையாக இருந்தது யார்? பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், இதுவரை எவ்வளவு மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்டுள்ளனர்? என சாப்டூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 
    Next Story
    ×