search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேரணாம்பட்டில் வீதியில் தஞ்சமடைந்த பொதுமக்கள்.
    X
    பேரணாம்பட்டில் வீதியில் தஞ்சமடைந்த பொதுமக்கள்.

    குடியாத்தத்தை தொடர்ந்து பேரணாம்பட்டில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

    தொடர்ந்து பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் நில அதிர்வு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலகொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி மற்றும் 25-ந்தேதி இரவு நேரங்களில் திடீர் என சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் விசாரிக்கும்போது மேற்கண்ட கிராமங்களிலும் நில அதிர்வு இருந்ததாக தெரியவந்தது.

    இந்நிலையில் நவம்பர் 29,30-ந்தேதிகளில் அதிகாலையில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லிமேடு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை 3.15 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறை அடுத்த மீனூர் கொல்லிமேடு பகுதியில் சில வினாடிகள் பெருத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்துள்ளன. மின்விசிறிகள் தாறுமாறாக சூழன்றுள்ளது.

    இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். 2 மாதங்களில் இப்பகுதியில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    அதேபோல் குடியாத்தம் அடுத்த பரதராமி டி.பி.பாளையம் ஊராட்சி அரிகவாரிபல்லி கிராம பகுதியிலும் மாலை 3.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு விட்டு விட்டு வெளியே வந்து பாதுகாப்பாக நின்றனர்.

    அப்போதும் கால்நடைகள் கத்தியபடி இருந்துள்ளது. பாத்திரங்கள் உருண்டோடின மின்விசிறிகள் தாறுமாறாக சுற்றியுள்ளது. இதனால் பயந்து போன கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.டி. மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியிலும் நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பேரணாம்பட்டு நகரின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. லால்மஸ்ஜித் வீதி, குல்ஜார்வீதி, நூர்அஹ்மத், ஆமினாவீதி, சார்மினார் வீதி, சின்ன மஸ்ஹித் வீதி, மவுலா வீதி, உமர்வீதி, எல்.ஆர்.நகர், திரு.வி.க.நகர், குப்பைமேடு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் நில அதிர்வு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    நிலநடுக்கம் குறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் அச்சத்தை போக்க வேண்டும்.

    குடியாத்தம், பேர்ணாம்பட்டு சுற்றி உள்ள கிராம பகுதிகளில் பலமுறை முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அச்சமான சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×