search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முழு கொள்ளவை எட்டும் நிலையில் ரம்மியமாக காட்சி அளிக்கும் மணிமுத்தாறு அணை.
    X
    முழு கொள்ளவை எட்டும் நிலையில் ரம்மியமாக காட்சி அளிக்கும் மணிமுத்தாறு அணை.

    நிரம்பும் நிலையை எட்டிய மணிமுத்தாறு அணை- தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    நெல்லை மாவட்டத்தில் இதுவரை நிரம்பாத வடக்கு பச்சையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு நேற்றும், இன்றும் மழை குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது.

    அதிகபட்சமாக சிவகிரி பகுதியில் 13.2 மில்லி மீட்டரும், நெல்லையில் 3.6 மில்லி மீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் ஒரு மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை எதுவும் பதிவாகவில்லை.

    கடந்த 10 நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை வினாடிக்கு 1,278 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 113.90 அடியானது.

    அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 118 அடியாகும். எனவே இன்னும் 4 அடி நீர்மட்டம் உயர்ந்தால் அணை முழுவதும் நிரம்பி விடும். நாளை அல்லது நாளை மறுநாள் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுபோல நெல்லை மாவட்டத்தில் இதுவரை நிரம்பாத வடக்கு பச்சையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 325 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது.

    அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 4.50 அடி தண்ணீரே தேவை. எனவே தற்போது வடக்கு பச்சையாறு அணையும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளது.

    பாபநாசம் அணை

    பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2,771 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 2,747 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 138.45 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 141.04 அடியாக உள்ளது. அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டாலும், காட்டாற்று வெள்ளம் மற்றும் தாமிரபரணி கிளை நதிகளில் இருந்து பாயும் வெள்ளம் ஆகியவற்றால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் செல்கிறது.

    இன்று காலை நெல்லை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து வினாடிக்கு 21,760 கன அடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

    இன்று மழை பெய்யாவிட்டால் கடலுக்கு செல்லும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். கனமழை காரணமாக நெல்லை டவுனில் கடந்த சில நாட்களாக தெருக்களில் வெள்ளம் தேங்கியது. 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது தெருக்களில் உள்ள வெள்ளம் வடிந்தது.

    சந்திப்பிள்ளையார் முக்கு பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. காட்சி மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரும் வடிந்து, வழக்கம் போல் வாகனங்கள் சென்று வருகிறது.

    நெல்லை தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் சென்றாலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குளித்து வருகிறார்கள். குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் படித்துறையில் இன்று ஏராளமான பொதுமக்கள் வெள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.


    Next Story
    ×