search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் தலையிட முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

    முன்கூட்டியே விடுதலை பெறக்கூடிய தகுதியை கைதிகள் பெற்றுள்ளனரா? என்பதை அதிகாரிகள் தான் ஆய்வு செய்ய முடியும். அதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதற்காக சில நிபந்தனைகளையும் அறிவித்து அரசாணை பிறப்பித்தது. என் கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். முன்கூட்டியே விடுதலை ஆக அனைத்து தகுதிகள் இருந்தும் அவரை விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு நான் கொடுத்து மனுவும் பரிசீலிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கணவர் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளார். அதனால், முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட விதிகளின்படி, இவரை விடுதலை செய்ய முடியாது. அதனால், இவரது கோரிக்கையை அறிவுரை கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுள் தண்டனை என்பது கைதி கடைசி மூச்சு வரை சிறையில் தண்டனையை அனுபவிப்பதுதான்” என்று கூறப்பட்டிருந்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “அரசு பிறப்பித்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ள தகுதிகளை எல்லாம் ஆயுள் தண்டனை கைதி பெற்றுள்ளாரா? என்பதை அதிகாரிகள் தான் பரிசீலிக்க முடியும். அதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. இருந்தாலும், மனுதாரர் கணவர் 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளதாக கூறுகிறார். அதனால், அவரது கோரிக்கையை அறிவுரை கழகம் சட்டப்படி விரைந்து பரிசீலித்து முடிவை அறிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
    Next Story
    ×