என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் அணைக்கு வரும் 45 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் இருந்து நேற்றிரவு முதல் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×