search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 138.50 அடியை எட்டியபோது கடந்த மாதம் 29-ந் தேதி அணை பகுதிக்கு சென்ற கேரள அமைச்சர்கள் 2 ‌ஷட்டர்களை திறந்து தண்ணீரை இடுக்கி மாவட்டத்துக்கு வெளியேற்றினர். அதன் பிறகு அடுத்தடுத்து 5 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு 3000 கன அடிக்கு மேல் வீணாக தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டாமல் குறைக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசை கண்டித்தும் தமிழக உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் போராட் டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அணையின் நீர் மட்டம் 139 அடியை எட்டாமல் இருந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் தற்போது 138.95 அடியாக உள்ளது. அணைக்கு 1897 கன அடி தண்ணீர் வருகிறது.

    நேற்று வரை 1852 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 933 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீர் இருப்பு 6861 மி. கன அடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 69.27 அடியாக உள்ளது. இதனால் 58-ம் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அணைக்கு வினாடிக்கு 2684 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று 3069 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1000 கன அடி குறைக்கப்பட்டு 2069 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5647 மி. கன அடியாக உள்ளது.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாசன குளங்கள் மற்றும் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    Next Story
    ×