என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்- மு.க.ஸ்டாலின்

    கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    வேலூர்:

    இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் செய்திருந்தாலும் 6-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இந்த விழாவிற்கு வந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமைப்படுகிறேன்.

    ஒரு அடையாளத்திற்காக தான் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் என அழைக்கிறேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான்.

    அந்த அடிப்படையில் இனத்தால் மொழியால் பண்பாட்டால் நாகரிகத்தால் நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். நாம் அனைவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்.

    கடல்தான் நம்மை பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் தான் நம்மை இணைத்தது.

    தமிழர்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் திமுக. 1983-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே தங்கினார்கள். 1997 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் மூலம் இலங்கை தமிழர்கள் ஓரளவு பயன் அடைந்தார்கள்.

    ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் பற்றி எந்த கவலையும் படவில்லை.

    இலங்கை தமிழர்களுக்காக மீண்டும் திட்டங்களை தொடங்கியுள்ளோம். அவர்கள் அகதிகள் அல்ல அவர்களுக்காக நாம் இருக்கிறோம்.

    110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அறிவித்தேன். அதனை செயல்படுத்தும் நாள் இந்த நாள். அதற்காக பெருமைப்படுகிறேன்.

    கருணாநிதி

    கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது 1997-98-ம் ஆண்டு 3594 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.

    1998-1999-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 826 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ம் ஆண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 106 முகாம்களை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி உடனடியாக அங்குள்ள அடிப்படைத் தேவைகள் என்ன அவர்களுக்கு என்ன செய்து தர வேண்டும் என்பது குறித்து அறிக்கை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    முகாம்களில் உள்ள 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு 7469 வீடுகள் கட்டித்தரவும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முகாம்களில் உள்ள மாணவர்களின் என்ஜினீயரிங் முதுகலை படிப்பு கல்விக்கட்டணம் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

    இலங்கை தமிழர்களுக்கான மாதாந்திர பணபலன் உயர்த்தி வழங்கப்படும். அலுமினிய பாத்திரங்களுக்கு பதிலாக சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும்.

    இலங்கை தமிழர்கள் நலனுக்காக 12.41 கோடி, துணிகளுக்கு ரூ.3 கோடி எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 2.47 கோடி கியாஸ் சிலிண்டருக்கு 8.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு அரிசி மானியத் தொகையை அரசே ஏற்று இலவசமாக வழங்கப்படும்.

    முகாமில் உள்ள மாணவர்கள் இலவச கல்விக்காக 4.35 கோடி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க 6.15 கோடி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இன்று 294 சதுர அடியில் 3 ஆயிரத்து 510 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குடிநீர் மின்சாரம் சாலை வசதி கழிவுநீர் வசதி உள்ளிட்டவற்றுக்ககு ரூ.30 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது முடிவல்ல. மீதம் உள்ள 105 முகாம்களிலும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.

    நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களுடைய உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் மூடினால் இன்னொரு ஜன்னல் திறக்கும்.

    இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் தி.மு.க. கதவை திறந்து வைத்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×