search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை (கோப்புப்படம்)
    X
    நகை (கோப்புப்படம்)

    கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி- அரசாணை வெளியீடு

    கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 13-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

    தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியிருந்தார். அதில், கூட்டுறவு நிறுவனங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரு குடும்பத்தினர் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில், ஒரு சில கடன்தாரர்கள் தங்களின் கடன் தொகையை பகுதியாகவோ, முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.17 ஆயிரத்து 115 கோடியே 64 லட்சம் தொகையாகும்.

    கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பொது நகைக்கடனை பகுதியாகவோ முழுமையாகவோ திருப்பி செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர், அசல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்ட நிலுவையாக ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இந்த நகைக்கடனை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

    நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் உள்ள கடனை, அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்பட்டமான நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நகைக்கடன் தள்ளுபடி திட்டம் மூலம் தமிழகத்தில் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள். வழிகாட்டு நெறிமுறைகளில் கூடுதல் நெறிமுறைகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவு சங்க பதிவாளர் ஏற்படுத்தலாம்.

    கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து, அதாவது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பு தொகையில் இருந்து வழங்கப்பட்டு உள்ளதால், அசல் தொகை மற்றும் வட்டியை அரசு ஏற்றுக்கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையை வழங்கும்.

    பொதுநகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, தகுதியான நபர்கள் கண்டறியப்பட வேண்டும். அதற்காக ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு, கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டு பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    எனவே கடன் தள்ளுபடி, தகுதியற்ற நபருக்கு சென்றடையக்கூடாது. அதே நேரம் முழுத்தகுதியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பம் விடுபட்டுவிடக்கூடாது.

    ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றிருந்து, அவர்களின் அனைத்து பொதுநகைக்கடனை சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்கு உட்பட்டு இருந்தால், மற்ற தகுதிகளுக்கு உட்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    5 பவுனுக்கு மிகாமல் நகையீட்டின் பேரில் நகைக்கடன் பெற்று மார்ச் 31-ந் தேதியன்று கடன் நிலுவையில் இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தப்பட்ட கடன், தள்ளுபடிக்கு தகுதி பெறாத இனமாக கருதப்படும்.

    ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒரே நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் மூலம் 5 பவுனுக்கு மேற்பட்டு அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகைக்கடன் மற்றும் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன் தள்ளுபடி இனத்திற்கு வராது.

    மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன், 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதின் பயனடைந்தவர்கள் மற்றும் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அவரின் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்; எந்த பொருளும் வேண்டாத ரேஷன் கார்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர் பெற்ற நகைக்கடன்;

    மத்திய மற்றும் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர், குடும்பத்தினர், அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் அல்லது காலமுறை அடிப்படையில் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவோர், அரசு ஓய்வூதியர்கள் (குடும்ப ஓய்வூதியர்கள் தவிர) பெற்ற நகைக்கடன்; நகையே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன்; போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

    சுயவிருப்பம் பேரில் நகைக்கடன் தள்ளுபடி பெற விருப்பம் இல்லாதவர்கள்; புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள் கொடுத்தவர்கள்; ஆதார் கார்டில் புதுச்சேரி உள்ளிட்ட வேறு மாநில முகவரிகள் இருப்பவர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படக்கூடாது.

    எடை, தரம், தூய்மைக்குறைவு, தரக்குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, அந்த நகைக்கு வழங்கப்பட வேண்டிய அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×