என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியை பார்வையிட்டபோது எடுத்த படம்.
    X
    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியை பார்வையிட்டபோது எடுத்த படம்.

    வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை: துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு

    ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் போலீசார் டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் :

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 54). இவர் நேற்று பென்னலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற போது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.

    இதனால் அச்சத்தில் இந்திரா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

    அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதும், வழிப்பறி கொள்ளையர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.

    இதற்கிடையே கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×