search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் அனுப்பி வைப்பு

    சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாலும் நீர் வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 43.80 அடியாக இருந்தது. இன்று 42.92 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. வடவாறு மற்றும் செங்கால் ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது.

    சென்னை மக்களின் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து ராட்சத குழாய் மூலம் நேற்று முன் தினம் 54 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று முதல் 60 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×