search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க.விக்ரமன்
    X
    தங்க.விக்ரமன்

    பா.ஜனதா எம்.எல்.ஏ. நியமனம்- புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பலம் உயர்ந்தது

    பாகூரை சேர்ந்த பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை புதிய எம்.எல்.ஏ.வாக மத்திய அரசு நியமித்ததால் புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பலம் உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின்பேரில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் புதுவையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. ஓராண்டு ஆன நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வில்லை.

    இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக 3 பேரை எம்.எல். ஏ.க்களாக நியமித்தது. பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்தது.

    இவர்களின் நியமனத்தை காங்கிரஸ் அரசு ஏற்க மறுத்து சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்து வந்தது. மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

    புதுவை சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என கோர்ட்டு தெரிவித்தது. இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரண மடைந்தார். இதனால் அந்த இடம் காலியானது.

    புதுவை சட்டசபையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் வரையே உள்ளது. குறுகிய காலத்துக்கு புதிதாக எம்.எல்.ஏ.க்கள் நியமிக்க மாட்டார்கள் என கருத்து நிலவியது. ஆனால். மத்திய அரசு நேற்று பாகூரை சேர்ந்த பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை புதிய எம்.எல்.ஏ.வாக நியமித்தது.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களை இழுத்து புதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்ட மிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பலத்தை உயர்த்தும் நோக்கில்தான் புதிதாக எம்.எல்.ஏ.வை மத்திய அரசு நியமித்துள்ளதாக தெரிகிறது.

    புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு சபாநாயகருடன் சேர்த்து 12 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. அரசை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு 3, சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவோடு ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    தற்போது எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரசில் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா 3 (நியமனம்) என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவிகளை ராஜினமா செய்துள்ளனர்.

    பாகூர் எம்.எல்.ஏ. தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் 3 தொகுதிகள் காலியாக உள்ளது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் பதவி விலகினால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் சமநிலை அடைந்துவிடும். இதனால் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பும் ஏற்படும். இது காங்கிரசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×