search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தேவகோட்டை அருகே 80 பவுன் நகை- 6½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

    கதவை உடைத்து வீடு புகுந்து 80 பவுன் நகை, 6½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, வீடு முழுக்க மல்லிப்பொடியை தூவி கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர், கார்மேகம். இவருடைய மனைவி ராஜாமணி (வயது 60). இவர்களது மூத்த மகன் ரமேஷ் திருச்சியிலும், இளைய மகன் சுரேஷ் சிங்கப்பூரிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்காக 2 மகன்களும் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, பின்னர் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். மூத்த மருமகள் ராதிகா மட்டும் ராஜாமணியுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் ராஜாமணியும், ராதிகாவும், துக்க நிகழ்ச்சிக்காக மற்றொரு ஊருக்கு சென்றிருந்த நிலையில், அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 80 பவுன் நகை, வீட்டில் இருந்த 6½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. மோப்பநாய் மூலம் தங்களை பிடித்து விடாமல் இருக்கவும், தடயத்தை அழிக்கவும் வீட்டில் சமையல் அறையில் இருந்த மல்லிப்பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவிவிட்டு கொள்ளையர்கள் தப்பியதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×